மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பில் துப்பாக்கியுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 15ஆம் திகதி ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஓட்டமாவடி பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (37 வயது) என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில் துப்பாக்கிசூடு நடாத்துவதற்கு உதவியதாக தெரிவிக்கப்படும் நபர் இன்று பிற்பகல் எஸ்.எம்.ஜி.ஹாஜியார் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கியும் சந்தேக நபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வி.ஏ.அர்ஜுனவின் தலைமையில் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறை சார்ஜன்ட் எம்.டி.எம்.தாகா ஆகியோர் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு அரசியல் பிரச்சினையாக காட்டப்பட்டாலும் இந்த சூட்டு சம்பவம் குடும்ப பிரச்சினையால் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.