Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, December 16, 2014

முஸ்லிம்கள் குடியேற்றத்துக்கு எதிராக ஜெர்மனியில் பேரணி

ஜெர்மனியில் முஸ்லிம்கள் குடியேற்றத்துக்கு எதிராக டிரெஸ்டென் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற  பேரணியில் கலந்து கொண்டவர்கள்.அகதிகள் என்ற போர்வையில் இஸ்லாமியர்கள் ஜெர்மனியில் குடியேறுவதாகக் கூறி, அந்த நாட்டில் திங்கள்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது.
ஜெர்மனியில் வெளிநாட்டினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் குடியேறுவதற்கு, "ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் இஸ்லாமியமயமாக்கலுக்கு எதிரான உண்மை ஐரோப்பியர்கள்' (பெகிடா) என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அந்த அமைப்பு சார்பாக திங்கள்கிழமை நடத்திய பேரணியில் 15,000 பேர் கலந்து கொண்டனர்.
அண்மைக் காலமாக அந்த அமைப்புக்கு ஆதரவு அதிகரித்திருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த அமைப்பை நிறுவிய லுட்ஸ் பாக்மான் கூறியதாவது: ஜெர்மன் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதும், எங்களது பாதை சரியானதுதான் என்பதும் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.



கடந்த முறை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைவிட தற்போது இருமடங்கு அதிகமானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆட்சியாளர்கள் எங்களைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திவிட முடியாது என்பதையே இந்தப் பேரணி காட்டுகிறது என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறுகையில், ""தஞ்சம் கேட்டு ஜெர்மனி வருபவர்களில் 70 சதவீதம் பேர், நாட்டின் பொருளாதாரத்தைக் குறி வைத்தே வருகின்றனர். அதற்கு அனுமதியளித்தால், நாட்டின் கலாசாரம் பாதிக்கப்படும். இவ்வாறு கருதுவதால் நாங்கள் நாஜிக்கள் ஆகிவிட மாட்டோம்'' என்றார்.
இனவெறி நாஜிக்களால் ஜெர்மனிக்கு ஏற்பட்ட களங்கம் மீண்டும் ஏற்படக் கூடாது என அந்த நாட்டுத் தலைவர்கள் உறுதியுடன் இருக்கும் நிலையில், "பெகிடா' அமைப்பின் வளர்ச்சி அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மெர்க்கெல் வேண்டுகோள்: இனவாத அமைப்புகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""ஜெர்மனியில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்துவதற்கு முழு உரிமை உள்ளது. ஆனால் பிற இனத்தவர் மீது வெறுப்பை விதைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது''என்று கூறினார்.