
பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா, இலங்கை, தஜிகிஸ்தான் மற்றும் மாலத்தீவுகளில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்று சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் குயின் கங் தெரிவித்தார். இதுகறித்து பீஜிங்கில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தஜிகிஸ்தானில் ஜி ஜின்பிங் சுற்றுப்பயணம் செய்கிறார். இதன்பிறகு மாலத்தீவு, இலங்கை மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, அந்தந்த நாட்டு குடியரசு தலைவர்களை சந்திக்கிறார்.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால், பாகிஸ்தான் செல்ல இருந்த சுற்றுப்பயண திட்டத்தை ஜி ஜின்பிங் ரத்து செய்துள்ளார். அதற்கு பதிலாக மாலத்தீவு செல்கிறார். இருப்பினும் சுற்றுப்பயண தேதி முழுமையாக இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு குயின் கங் தெரிவித்தார். ஜி ஜின்பிங் 3 நாள் பயணமாக வருகிற 17ம் தேதி இந்தியா வருகிறார். இதற்கான இறுதி ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று சீன உயர மட்ட தூதர்கள் மற்றும் மாநில கவுன்சிலர் யாங் ஜியச்சி ஆகியாரை சந்தித்து பேசினார்.