Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, January 30, 2014

ஈராக்கில் தொடரும் குண்டுவெடிப்பு: இந்த மாதத்தில் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு


ஈராக்கில் கடந்த 2006-2008ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சன்னி, ஷியா இனக்கலவரங்கள் முற்றிலும் முடிவு பெறாமல் தொடர்ந்து நீடித்த வண்ணமே உள்ளன. இன்னும் மூன்று மாதங்களுக்குள் அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்பர் மாகாணத்தில் தொடரும் வன்முறைக் கலவரங்கள் மறுபடியும் ஒரு முழுமையான மோதலுக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சமே அரசியல் பார்வையாளர்களுக்குத் தோன்றியுள்ளது.

அரசின் ராணுவத் துருப்புகள் சன்னி இனப் பெரும்பான்மை கொண்ட அன்பர் மாகாணக் கலவரங்களை அடக்குவதில் முனைப்புக் காட்டிவரும் நேரத்தில் நாடு முழுவதும் ஆங்காங்கே ரத்தம் சிந்தும் வன்முறைக் கலவரங்கள் நடந்தேறி வருகின்றன.

நேற்று மாலை தலைநகர் பாக்தாத்தின் தல்பியா, ஷுவாலா, ஜடிடா பகுதிகளில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல்களில் ஒன்பது பேர் பலியாகினர். பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல் பாக்தாதின் வடக்கில் உள்ள புறநகர்ப்பகுதிகளான மோசுல், துஸ் குர்மாட்டு நகரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மீண்டும் இன்று காலை பாக்தாதின் அருகில் உள்ள கசரா, தல்பியா பகுதிகளில் உள்ள உணவு விடுதி ஒன்றிலும், சந்தைப் பகுதியிலும் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் ஆறு பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதக் கலவரங்களில் ஈராக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 909 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமாகும். தொடர்ந்து நடைபெறும் இந்தத் தாக்குதல்களினால் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1,40,000த்தைத் தொட்டுள்ளதாகவும், 2006-2008 இனக்கலவரங்களுக்குப் பின் நடைபெற்ற மிக மோசமான இடப்பெயர்ச்சி இதுவென்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவிக்கின்றது.

தீவிரவாதிகளை ஈராக் எதிர்கொள்ள உதவும் விதமாக அமெரிக்க அரசு தங்களின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களில் 24ஐ அந்நாட்டிற்கு விற்கத் திட்டமிட்டுள்ளது. ஆயினும் அதிருப்தி அடைந்துள்ள சன்னி பிரிவினரின் நீண்ட கால மனக்குறைகளைத் தீர்த்து போருக்கு முடிவு கட்டும்படி வெளிநாட்டுத் தலைவர்கள் ஈராக்கின் ஷியா பிரிவு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment