
பெங்களூரூ : பெங்களூரூவில் மல்லேஸ்வரத்தை தொடர்ந்து, ஹிப்பல் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 8 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ., தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காருக்கு அருகில் இருந்த பைக்கில் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு : நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரூ போலீசார் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதல் தான். மர்ம நபர்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். முதலில் காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாயின. எனினும் வெடித்தது பைக் குண்டு என பா.ஜ., அலுவலக வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் உறுதி செய்துள்ளனர்.
யாரை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதனால் பா.ஜ. அலுவலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்த வாரம் பா.ஜ., முக்கிய தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர உள்ள நிலையில் பா.ஜ., அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கடந்த பிப்ரவரி மாதம் தில்சுக் நகர் பஸ் நிலையம் எதிரே, கோனார்க் மற்றும் வெங்கடாத்ரி எனஅடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 80 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரூவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு:
குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் என காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ., வே இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பாதுகாப்பு :
பெங்களூரூவில் ஒரே நாளில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் கூடும் இடங்கள், கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாவம் அப்பாவி மக்களும்,அரசியல்லவாதிகளும் இலங்கையை போன்று பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும்
ReplyDelete