Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, March 26, 2013

இலங்கையுடன் கையெழுத்திட்ட கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா வாபஸ் பெற வேண்டும்

Kaccattivu Sri Lanka signed an agreement with India to withdraw
சென்னை : இந்தியா , இலங்கை இடையே 1974ல் கையெழுத்தான கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், உச்ச நீதிமன்றம் மூலமாக இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவது தொடர்பாக பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்தபோது ஜெயலலிதா இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

1974 வரை கச்சத்தீவு நமக்கு சொந்தமாக இருந்தது. அதை இலங்கைக்கு கொடுத்த பிறகுதான் பிரச்னை ஏற்பட்டது. இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த உரிமை களை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று 1974 ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டாலும்  இலங்கை அதை மதிக்கவில்லை. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

தமிழக மீனவர்கள் என்றால் இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தோ என்னவோ மத்திய அரசும் மவுனம் சாதிக்கிறது. அதன் கையாலாகாத்தனம் காரணமாக தாக்குதல் தொடர்கிறது. கடந்த ஒரு மாதத்தில் நான்கு முறை நடந்துள்ளது. இந்த பிரச்னை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்றால், கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். அதற்காக 2008ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

மேற்கு வங்காளத்துக்கு சொந்தமான ஒரு நிலப்பகுதியை அன்றைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முனைந்தபோது அந்த மாநிலம் வழக்கு தொடர்ந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்துதான் ஒரு நிலப்பகுதியை இன்னொரு நாட்டுக்கு வழங்க முடியும் என  நீதிமன்றம் சொன்னது. அந்த தீர்ப்பிற்கிணங்க கச்சத்தீவு வழங்கப்படவில்லை என்று மனுவில் சுட்டிக் காட்டி, எனவே இந்தியா , இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்குமாறு கேட்டுள்ளேன். இந்த வழக்கில் வெற்றி கிட்டும் என்று நம்புகிறேன்.

இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்; இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வலுவான நடவடிக்கைகளை ராஜதந்திர முறையில் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும்; டெல்லியில் உள்ள இலங்கை தூதரை வரவழைத்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இந்தியா , இலங்கை இடையேயான கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றத்தை அணுகியது போல், கச்சத்தீவு பிரச்னையிலும் என் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment