வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 25 மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் கூடிய மத்திய கைத்தறி நெசவு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இதனை நடை முறைபடுத்த கைத்தறி விஷேட செயலணி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தி புரட்சிக்கு இசைவாக இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் தேவைகளை கவனத்திற் கொண்டும்,எமது நாட்டின் தொழில் பிரச்சினைக்கான தீர்வாக இந்த செயற் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
கைத்தறி நெசவு துறையின் விஷேட செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது இலங்கையில் இத்துறையில் 15 ஆயிரம் பேர் வரை ஈடுபட்டுவருவதாகவும்,இந்த எண்ணிக்கையினை இருவருடங்களுக்குள் 5 மடங்காக பரிணாமம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,இத்துறையினை அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் அதிகமான விதவைகளுக்கு தமது வீடுகளிலிருந்து கொண்டு இத்தொழிலில் வருமானம் ஈட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதே வேளை இளைஞர்,யுவதிகளை இத்துறையின் பால் ஈரக்கச் செய்து,அவர்களின் திறமைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஆட்சேர்ப்பு திட்டத்தை முன்னெடுப்பதுடன்,அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்க தமது அமைச்சு திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மாவட்ட மத்திய நிலையங்களில் விற்பனை ,நிறமூட்டல் மற்றும் வடிவமைப்பு துறைகளையும் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுவருகின்றன.இந்த நிலையில் வெளிநாட்டு சந்தைக்கு தேவையான நவீன வடிவமைப்பு தொடர்பான தகவல்களை இணையத்தளத்தின் மூலம் உடனுக்குடன் மாவட்ட மத்திய நிலையங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கையெடுக்கப்படும்..பிரதான தலைமை நிலையமாக கட்டுபெத்தையில் அமைந்துள்ள நெசவு திணைக்களம் செயற்படும்.தற்போது இலங்கையில் 511 கைத்தறி நெசவாலைகள் காணப்படுகின்றன.இதில் 2971 பேர் பணியாற்றுகின்றனர்,அதே போல் 22 நிறமூட்டல் நிலையங்களும் காணப்படுகின்றன.பிரதான கைத்தறி நெசவாலைகள் வடமேல் , தென் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே காணப்படுகின்றன.கிழக்கு மாகாணமானது இத்துறைக்கு பெயர் பெற்ற இடமாகும்.கடந்த 2004 ஆம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கிழக்கின் இத்துறை பெரு வீழ்ச்சியினை கண்டது.இவ்வருடம் இறுதி வரை கைத்தறி நெசவு உற்பத்திகளின் ஏற்றுமதி இலக்கு 146 மில்லியன்காளக காணப்படுவதாக எனது அமைச்சின் கீழ் உள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபை புள்ளி விபரம் மூலம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இத்துறையினை மேம்படுத்துவதற்கும்,சர்வதேச சந்தையில் உயர் இடத்தை அடைந்து கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள சர்வதேச கைத்தறி நெசவு கண்காட்சிகளுக்கு இலங்கியின் தயாரிப்புக்களை காட்சிபடுத்தவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதீயுதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.
அமைச்சின் செயலாளர் திலக் கொல்லுரே,மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக பிரதி நிதிகள்,நெசவு திணைக்கள பிரதி நிதிகள்,ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதி நிதிகள் உட்பட பலரும் இந்த செயலணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment