
கல்முனை மாநகர சபைக்கு மக்கள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை வசூலிப்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் உதவிக் காரியாலயங்களை நிறுவுமாறு முகாவின் பிரதி தேசிய பொருளாளரான எ.சி.எஹியாகான் - கல்முனை மேயரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ,
மாநகர சபைக்கு வரி செலுத்துவது கட்டாயமானதாகும். செலுத்தாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமுமாகும்.
கொழும்பு மாநகரத்தில் உரிய திகதிக்கு வரி செலுத்த தவறினால் - அந்தத் தொகையில் 50 வீதத்தை மேலதிகமாக தண்டப் பணமாக செலுத்த வேண்டும். இந்த நடைமுறைதான் எங்கும் உள்ளது.
அது ஒரு புறமிருக்க , வரி அறவீடுவதற்காக வீடு வீடாகச் செல்லும் உத்தியோகத்தர்கள் சில தவிர்க்க முடியாத அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அறிய முடிகின்றது.
இதனை தவிர்ப்பதற்காக , மாநகர சபைக்கு உட்பட்ட 6 ஊர்களிலும் 6 உதவிக் காரியாலயங்களை திறந்து , ஒரு நபரையும் நியமித்தால் அங்கு சென்று தமது வரிப் பணத்தை மக்கள் செலுத்த இலகுவாக இருக்கும்.
அங்கு நியமிக்கப்படும் அந்த ஒரு ஊழியராக - தற்போது வரி அறவிடும் உத்தியோகத்தரையே நியமிக்கலாம்.அல்லது வேறு ஒருவரை நியமிக்கலாம்.
தற்போது வரி அறவிடும் உத்தியோகத்தர்களை சபையின் ஏனைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுமேயானால் வீணான தடங்கல்கள் தவிர்க்கப்பட்டு நிர்வாக செயற்பாடு சீரடைய வழி ஏற்படும் என்பது எனது நம்பிக்கை. என கல்முனை மாநகர மேயரிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் எஹியாகான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment