Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, May 18, 2019

அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப புத்தபிரானின் போதனைகளை மீட்டிப் பார்போம்


அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப புத்தபிரானின் போதனைகளை மீட்டிப் பார்போம்அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளாது உயர்ந்த பட்ச அமைதியுடன் கூடிய சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக புத்தபெருமான் வழங்கிய அனுசாசனங்களை பின்பற்றுவது முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, 
கிறிஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தின் சாக்கிய இராச்சியத்தில் பிறந்து, நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள புத்தகயாவின் போதிமர நிழலில் ஞானம் பெற்று, குசினாராவின் உபவத்தன வனத்தில் பரிநிர்வாணமடைந்த புத்த பிரானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து பூஜிக்கும் அதி உன்னத வெசாக் பௌர்ணமி தினமே இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 
ஆறு வருடங்கள் கங்கைக் கரையில் பயணித்து ஆசான்களின் தர்ம மார்க்கத்தை ஆராய்ந்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்ட சித்தார்த்தர், இறுதியில் வீரியம், உறுதிப்பாடு, பக்தி மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டு மானிட அறிவினாலேயே ஞானம் பெற்றார். 
அதிகாரத்திற்காக அடுத்தவரை அழிப்பதற்குப் பதிலாக அளவற்ற அமைதியைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல் பற்றிய புத்தபிரானின் போதனைகளை இந்த அருமையான பௌர்ணமி தினத்தில் நாம் மீண்டும் மீட்டிப் பார்த்தல் வேண்டும். 
பீதி மற்றும் அபாயம் அற்ற பரஸ்பர நம்பிக்கைக்குப் பாத்திரமான கருணை மிகுந்த சமூகத்தின் உருவாக்கத்திற்காக புத்தபிரான் போதித்த “குரோதத்தினால் குரோதம் தணியாது. அன்பினாலேயே குரோதம் தணியும்.” என்ற நிலையான உண்மையை நோக்கி மீண்டும் மீண்டும் எமது மனங்களை செலுத்த வேண்டிய காலமே இதுவாகும். 
பௌத்தர்கள் அல்லாதோரை பௌத்தர்களாக மாற்றுவதற்காகவோ அல்லது புத்தரின் பெயரினாலோ ஒரு துளி இரத்தத்தைக் கூட சிந்தாது, தர்ம மார்க்கத்தை அற வழியிலேயே எடுத்துக்கூறும் 2500 வருடங்களுக்கும் மேலாக எம்மால் பின்பற்றப்பட்டு வரும் உன்னத பௌத்த வரலாறு பற்றிய புரிந்துணர்வைக் கொண்டுள்ள நாம், ஆயுத பலம் என்பது தற்காலிகமானதே என்பதை புரிந்து கொண்டவர்களாகவே இருக்கின்றோம். 
எந்த குறிக்கோளைக் கொண்டிருந்த போதிலும் பாவங்கள் நரகத்திற்கான மார்க்கமே என்பதை அறிந்து புத்தபிரானின் போதனைகளுக்கமைய கருணை உள்ளத்தோடு அதர்மத்தை தர்மத்தால் அழிக்கும் மார்க்கத்தில் பிரவேசித்து நாட்டில் நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்த இந்த வெசாக் தினத்தில் உறுதி பூணுவோம். 
இலங்கைவாழ் பௌத்த பெருமக்களுக்கும் உலகவாழ் பௌத்தர்களுக்கும் இந்த வெசாக் பௌர்ணமி நிம்மதியை கொண்டுவர வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி ​மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.