பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெளிநாடுகளில் தொழிலுக்கு சென்றுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ விஷேட திட்டங்களை தற்போது அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றன. இதற்கென வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பிலுள்ள குடும்பங்களின் நலன்களுக்கென இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் உருவாக்கப்பட்ட ரட்டவிருவோ அமைப்பின் சங்கங்களுடாக இந்த உதவித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் செயற்படும் ரட்டவிருவோ அமைப்புக்களுக்கு 10000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் விஷேட நிகழ்வு 18-12-2014 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எம்.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இது தவிர வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு சென்றுள்ளவர்களின் குடும்பங்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு தற்போது அறிமுகம் செய்துள்ள விஷேட திட்டங்கள் பற்றிய அறிவூட்டல் நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.