Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, November 11, 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்; நிமால் சிறிபால சபையில் தெரிவிப்பு -

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எந்தவிதமான தடையும் கிடையாதென உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஏகமனதாகத் தீர்மானித்து அந்த வியாக்கியானத்தை அனுப்பியுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீர்ப்பாசன அமைச்சின்மீதான வரவு  செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

 

மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உரிமை தனக்கு இருக்கின்றதா  என்று  உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில் 10 உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கூடி ஆராய்ந்த பின்னர் ஏகமனதாக இந்தப் பதிலை அறிவித்திருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

31(3 அ) (1)  1 அரசியலமைப்பு ஷரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியிலான எந்தத் தடையும் கிடையாதென உயர்நீதிமன்றம் அதன் தீர்மானத்தில் அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடும்  உரிமை அவருக்கு இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பிரகாரம் யாருக்கேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை கவனத்தில் கொள்ள முடியும்.

இந்த வியாக்கியானத்துக்கமைய ஜனாதிபதி மீண்டும் தாம் விரும்பிய நேரத்தில் தேர்தலை அறிவிக்கவும், போட்டியிடவும் உரிமை இருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
-TKS-Thinakkural-