Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, January 27, 2013

ஜனாதிபதியின் சர்வ கட்சிக்குழு முஸ்லிம்கள் மத்தியிலுள்ள இயக்கங்களை தடைசெய்யும்: உலமா கட்சி

மத அடிப்படைவாதங்கள் பற்றி ஆராய்வதற்கான ஜனாதிபதியின் பாராளுமன்ற சர்வ கட்சிக்குழு என்பது முஸ்லிம்கள் மத்தியிலுள்ள இயக்கங்களை தடைசெய்வதில்தான் கொண்டு போய் முடியுமே தவிர முஸ்லிம் மக்களுக்கெதிரான பேரினவாதத்தை அடக்கியதாக முடியாது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.



இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக பொது பல சேனா போன்ற அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேச முடியாமல் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை ஆராயவென குழுவொன்றை நியமிக்காமல் மத அடிப்படைவாதம் பற்றி ஆராய சர்வ கட்சி குழு நியமிப்பதாக தெரிவித்துள்ளமை நோய்க்கு மருந்து தராமல் நோயை மேலும் அதிகரிக்கும் செயலாகவே தெரிகிறது.

உண்மையில் இத்தகைய பிரச்சினைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் ஒரே நாளில் தீர்க்க முடியும். ஓர் இனத்துக்கெதிராக இன்னொரு இனம் ஆர்ப்பாட்டம் செய்வதை இலங்கையின் அரசியல் சாசனம் தடை செய்கிறது. இந்த வகையில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிசார் அனுமதியளிக்க வேண்டாம் என அரசு உத்தரவிடுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும்.

அதனை விடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது விடயத்தை இழுத்தடித்து வேறு பக்கம் திசை திருப்புவதாகவே முடியும். இறுதியில் பொது பல சேனாவை தடைசெய்வதாயின் தப்லீக், தவ்ஹீத் போன்ற முஸ்லிம் அமைப்புக்களையும் தடை செய்யவேண்டும் என இந்த குழு தீர்மானிக்கலாம்.

 ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா விடயத்தில் நடந்து கொண்ட விதத்தை நாடே அறியும்.

 பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட பின் அவை வேறு பெயர்களில் இயங்க ஆரம்பிக்கும். ஆனால் முஸ்லிம் இயக்கங்களுக்கு வாழ்நாள் தடை ஏற்படும்.

 ஆகவே இத்தகைய தெரிவுக்குழு நியமிப்பதை உலமா கட்சி மறுப்பதோடு ஜனாதிபதி அவர்கள் நேரடியாக தலையிட்டு இனங்களுக்கிடையில் இனவாதத்தை உருவாக்கும் வகையில் யார் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டாலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டும் என அறிவிப்பதே இதற்கான தீர்வாகும் என்பதை உலமா கட்சி தெரிவிக்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment