வட மாகாணசபை அதிகார மீறலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.வட மாகாணசபை அரசியல் சாசன அதிகாரத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், மாகாணசபைகளுக்கு சர்வதேச விவகாரங்களில் தலையீடு செய்ய அனுமதி கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தில் சர்வதேச விசாரணைகளை நடாத்துமாறு தீர்மானம் நிறைவேற்ற மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் அளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபைகளை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இவ்வாறு வட மாகாணசபை கலைக்கப்பட்டால் வடக்கில் சுயாட்சி நிர்வாக அலகு குறித்த எண்ணக்கரு வலுப்பெரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அரசாங்கமே அழைப்ப விடுத்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் அரசாங்கம் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அரசியல் சுயலாப நோக்கில் செயற்படாவிட்டால், சவால்களை எதிர்நோக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சித் தயார் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment