
பேச்சு:
…… இந்த அமைச்சுப் பதவியை நான் தந்து விட்டுப் போகத் தேவயில்லை நீங்களாகவே பறித்துக் கொள்ளலாம் என அப்பொழுது நான் ஜனாதிபதியிடம் சொன்னேன். இது பெரிய ஆசையில் ஆர்வத்தில் பெற்றுக் கொண்ட அமைச்சர் பதவியல்ல.
மறுபேச்சு :
ஹக்கீமின் அமைச்சுப் பதவியை ஜனாதிபதி ஒருபோதும் பறிக்க மாட்டார். தனது அமைச்சுப் பதவியை எப்படியாவது ஜனாதிபதி பறித்துக் கொள்ள வேண்டும் என்றுதான். ஹக்கீமும் தேர்தல் பிரச்சாரங்கள் செய்வார்.
ஆனால் எப்படிப் பே(ஏ)சினாலும் அமைச்சுப் பதவி பறிக்கப்பட மாட்டாது. அமைச்சுப் பதவியைப் பறிப்பது என்பது சும்மா ஆடுகின்ற பாம்புக்கு மகுடி ஊதுவதைப் போன்றது.
அமைச்சுப் பதவியை தானாகக் கொடுத்து விட்டு அரசை விட்டு வெளியேறி வந்தால் அரசின் மீது தாறுமாறாக மேடைகளில் பேச முடியாத நியாயம் இருக்கிறது என்ற காரணத்தினால் தான், அரசு அதைப் பறித்துக் கொள்ளும் வரை ஹக்கீம் இருக்கிறார்.
அப்போதுதானே விரட்டி விட்டார்கள் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டோம். அது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. எங்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று தேர்தல் மேடைகளில் உணர்ச்சிபூர்வமான பிரச்சாரங்களைச் செய்யலாம். வழமை போன்று வாக்கு கேட்பதற்கு இதுதானே. வழியும். மஹிந்தவின் ஆட்சியும் இல்லை என்றால் முஸ்லிம் காங்கிரஸுக்கு பேசுவதற்கும் ஒன்றுமில்லை என்ற நிலைதான்.
இதனால் ஜனாதிபதி அமைச்சுப் பதவியைப் பறிக்கப் போவதுமில்லை, ஹக்கீம் விடப்போவதுமில்லை இதை விளங்காதவர்களாக மக்களுமில்லை.
பேச்சு :
நாங்கள் செய்த பெரிய பரோபகாரத்தினால் இந்த ஜனாதிபதி ஆகக்கூடிய அதிகாரங்களோடு இருக்கிறார். எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமாகச் சேர்ந்து 18வது அரசியலமைப்புத் திருத்தம் என்பதை கொண்டு வந்த பாவத்திற்கு துணை போயுள்ளோம்.
மறுபேச்சு :
இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏதாவது நெருக்கடிகளும் ஆபத்துக்களும் ஏற்பட்டால் அந்தப் பாவத்தை செய்தவர்கள் நாங்கள்தான் என்ற ஒரு உண்மையை இதன் மூலம் ஹக்கீம் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
18வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்ததை ஒரு பாவச் செயலாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பாவத்தைச் செய்தமைக்குத்தானே அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. எனவே இந்தப் பாவத்தை தெரிந்து கொண்டு செய்து அமைச்சுப் பதவியையும் பெற்று விட்டு. ‘இது பெரிய ஆசையில் ஆர்வத்தில் பெற்றுக் கொண்ட அமைச்சர் பதவியல்ல’ என்று மேடையில் முழங்குகிறார்.
இது என்ன கண்கட்டி வித்தை. அமைச்சுப் பதவியில் ஆசையும் ஆர்வமும் இல்லாமல்தான் இந்தப் பாவத்தைச் செய்தாரா? அல்லது சமூகத்திற்காகத்தான் இந்தப் பெரும்பாவத்தைச் செய்தாரென்றால் இதனால் சமூகம் எதைத்தான் பெற்றுக் கொண்டது.

ஜனாதிபதியின் ஆட்சி நீடிக்கின்ற பெரும் பாவத்தைச் செய்ததன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி வந்து அந்தக் கட்சி இரண்டு மூன்றாகத் துண்டாடப்படுவதும் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் மார்தட்டுகிறார். இதன் மூலம் சுதந்திரக் கட்சியை அவர்தான் பாதுகாத்திருககிறார் என்ற உண்மை புரிகிறது.
சுதந்திரக் கட்சியையும் ஜனாதிபதியையும் காப்பாற்றும் பாவங்களை எல்லாம் செய்ய முடியும் என்றால், சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் மட்டும் ஏன் போட்டியிட முடியாது?
அவர் செய்த பாவங்களுடன் ஒப்பிடும் போது தேர்தலில் இணைவது என்பது சிறுபாவம்தானே.
ஆனால் உண்மை என்னவென்றால் பஷீர் சேகுதாவுதின் வீட்டுக்கு பசில் ராஜபக்கஷ சென்று கட்சியின் வடபகுதிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் கலந்துரையாடல் செய்த கோபத்தில் எடுத்த ஒரு முடிவாகத்தான் இது தெரிகிறதே தவிர வேறு எந்தக் காரணங்களும் இந்த முடிவுக்குப் பின்னால் இருப்பதாகத் தெரியவில்லை.
யாருடனோ கொண்ட கோபத்தை எதிலையோ காட்டியிருக்கிறார். அவர் கூறுவதைப் போன்று முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை அவரே அறுத்திருக்கிறார்.
பேச்சு :
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பேசுவதற்கு இன்று கட்சியின் தவிசாளருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. எப்பொழுது அமைச்சுப் பதவியை கட்சித் தலைவரின் அங்கீகாரம் இல்லாமல் பின் கதவால் போய் அவர் பெற்றாரோ. அன்றிலிருந்து கட்சிக்காகப் பேசும் அருகதையை அவர் இழந்துவிட்டார். என்பதை மிகவும் தெளிவாகக் கூறி வைக்கிறேன்.
மறுபேச்சு :
மேலே பஷீரை கட்சிக்காப் பேச அருகதை இல்லாதவர் என்று பேசி விட்டு, ‘புத்தளம் மாவட்டத்தில் எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பஷீரை பொறுப்பாக நியமித்திருந்தோம்’ என்றும் கூறுகிறார்.
கட்சியைப் பற்றிப் பேச அருகதை இல்லாத ஒருவரை புத்தளப் பிரச்சாரத்திற்கு ஏன் பொறுப்பாக்க வேண்டும்? அவர் மீது வீண்பழி கூறி மற்றுமொரு துரோகியாக அவரை அடையாளம் காட்டுவதற்கா?
ஹக்கீமின் பேச்சில் காணப்படும் உள்வேக்காடு பஷீர் சேகுதாவுத் முழு மந்திரியானதுதான் என்பது தெளிவாக விளங்குகிறது.
கட்சிக்குள் தான் மட்டும்தான் முழு மந்திரியாக இருக்க வேண்டும் மற்றவர்கள் அரை மந்திரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஹக்கீமின் மாற்ற முடியாத ஒரு சூத்திரம்.
அதற்கு முன் உதாரணம் அதாஉல்லாவுடனான முரண்பாடு அமைச்சுப் பதவியில்தான் உருவானது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கின்ற அத்தனை ஆட்சி அதிகாரங்களும் கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளால்தான் பெறப்படுகிறது.
எனவே இந்த மக்களின் வாக்குகளுக்கு ஒரு முழு அமைச்சைப் பெறுவதற்கான உரிமை தலைவரை விடவும் கிழக்கு மண்ணின் உறுப்பினர்களுக்கே இருக்கிறது. தலைமைத்துவம் பறிபோய் விடும் என்ற பயத்தினால் இந்த உரிமை ஹக்கீமால் மறுக்கப்பட்டே வந்தது.
பஷீர் அமைச்சுப் பதவியை பின் கதவால் எடுத்ததாகக் கூறுகிறார். அமைச்சுப் பொறுப்பு அன்றைய தினம் பஷீருக்கு மட்டும் வழங்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றமாகத்தான் அது நடந்தது.
எனவே இந்த மாற்றம் முன்கூட்டியே ஹக்கீமுக்கு தெரிந்திருக்கும் அமைச்சரவையில் இதற்கான கதைகள் வந்திருக்கும். அதைத் தடுக்க முடியாமல் நாட்டில் இல்லாமல் இந்தியா சென்றிருந்தார் ஹக்கீம்.
இப்படியான இக்கட்டான நிலைமைகளில் வெளிநாட்டுப் பயணம் செல்வது இது முதல்தடவை அல்ல பல தடவைகள் நடந்திருக்கிறது. இதுவும் தலைவரின் எண்ணத்தில் சாணக்கியமான ஒரு செயற்பாடுதான்.
இது ஒருபுறமிருக்க பஷீர் அமைச்சுப் பதவியை எடுப்பது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரிடம் பேசியிருக்கிறார். இந்தியாவிலிருந்த தலைவருக்கும் தொடர்பு கொண்டிருக்கிறார் தொடர்பு கிடைக்கவில்லை. பின்னர் செயலாளரின் அபிப்பிராயத்துடன் அமைச்சுப் பதவியை பெற்றிருக்கிறார். இதை அடுத்துக் கூடிய உயர்பிடக் கூட்டத்தில் பேசி அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாக பதிவாகி முடிந்து விட்டது.
பின்னர் புத்தள மேடையில் மீண்டும் எதற்கு பின் கதவால் அமைச்சுப் பெற்ற கதை. புத்தள மக்கள் இதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கப் போகிறார்களா?.
இவ்வாறான அமைச்சர் பதவியொன்றைப் பெறுவதே அவமானம் அதன் பெயரைப் பார்த்தாலே அவருக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்து என்னவென்று விளங்கும். என்று ஹக்கீம் எள்ளிநகையாடுகிறார். பஷPர் அரைமந்திரியாக இருந்திருந்தால் எந்த அமைச்சு கிடைத்தாலும் அது பொறுப்புவாய்ந்த ஒரு அமைச்சாக ஹக்கீமால் போற்றப்பட்டிருக்கும். முழுமந்திரி என்பதால் அது கேவலமான ஒன்றாக அவரால் நக்கலாகவும் பேசப்படுகிறது என்பதும் எமக்கு விளங்காமல் இல்லை.
இன்று அமைச்சர்கள் மலிந்து போயுள்ளனர். கல்லொன்றை தூக்கியெறிந்தால் அது அமைச்சர் ஒருவரின் தலையில்தான் போய் விழும். அந்த அளவுக்கு மலிவு என்றும் ஹக்கீம் ஆதங்கப்படுகிறார். இப்படி மலிவான அமைச்சரவையில் தானும் இருப்பதை மறந்தா பேசுகிறார்/
எறிகின்ற கல் அவரின் தலையிலும்தானே விழும். இவ்வளவு ரோசமுள்ள பேச்சுப் பேசுகின்றவர் அந்த அமைச்சுப் பதவியை தூங்கி வீசி விட்டு அல்லவா இதையெல்லாம் பேச வேண்டும்?
பேச்சு :
தனித்துத்தான் போட்டியிட வேண்டுமென்று முழு உச்ச பீடமும் வலியுறுத்திய போது தவிசாளர் திடீரென எழுந்து அரசாங்கத்தின் கொந்தராத்தைக் கொண்டு வந்து முன் வைத்தார். சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென்றார். அவர் அரசாங்கத்தின் கூலிப்படை என்று எங்களுக்குத் தெரியும்.
மறுபேச்சு :
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இதை விடவும் உதாரணம் இனி இல்லை. பஷீரை அரசாங்கத்தின் கூலிப்படை என்று ஹக்கீம் விமர்சிக்கும் நிலை வந்துள்ளது. இதுவரை காலமும் தவிசாளருக்கும் தலைவருக்கும் வித்தியாசமில்லாதவாறு ஹக்கீம் போற்றிப் போற்றி பஷீரை வைத்திருந்தார்.
மக்கள் விரும்பாத நிலையிலும், கட்சிக்குள் இருப்பவர்கள் எதிர்த்த நிலையிலும் தேசியப் பட்டியலையும் பிரதி அமைச்சையும் கொடுத்து பஷீரை முக்கியப்படுத்தியது யார்? அப்போதெல்லாம் இனித்த பஷீர் இப்போது கசப்பானது ஏன்?
அரசாங்கத்துடன் சேர்ந்து கேட்போம் என்பது ஒரு குற்றமா? உயர் பீடக் கூட்டத்தில் மாற்றுக் கருத்துச் சொல்கின்ற அனைவரும் அரசாங்கத்தின் கொந்தராத்துக்காரர்களும் கூலிப்படைகளும் தானா?
அரசாங்கத்தில் இருக்கிறோம் என்பதற்காக அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டக் கூடாது என்று சொல்வதைப் போன்றுதான், கட்சிக்குள் இருக்கிறோம் என்பதற்காக கட்சி சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாதுதானே.
சரியான நேரத்தில் எடுக்கின்ற பிழையான முடிவு தொடர்பாக மாற்றுக் கருத்துச் சொன்னால் அதற்குப் பதிலீடு இதுதானா?
கிழக்கு மாகாண சபையின் போதும் சேர்ந்து கேட்கும் முடிவைத்தான் பஷீர் சொன்னார் என்று அதையும் ஒரு பிழையான முடிவாகத்தான் ஹக்கீம் விமர்சித்திருக்கிறார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் கேட்டு பேரம் பேசும் பலத்தைப் பெற்றிருப்பதாக மார்தட்டுகிறார். முஸ்லிம் முதலமைச்சர் ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் பெறும் அடிப்படையை அவர் இழந்து விட்டார். என்பதையும் அவர் உணர வேண்டும்.
அதற்கும் உண்மையான காரணம் தலைமைத்துவம் பறிபோகும் என்ற பயம்தான். கிழக்கில் யாரும் முதலமைச்சராகவோ, முழு அமைச்சராகவோ வந்துவிடக் கூடாது என்ற தலைமைத்துவ மையக் கோட்பாடு ஹக்கீமிடம் இருந்து கொண்டே இருக்கிறது.
அவருக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் மட்டும்தான் தேவை கிழக்கார்களுக்குரிய எந்தப் பலனும் எந்தப் பதவியும் அவருக்குச் சமாந்திரமாக வந்துவிடக் கூடாது என்பதுதான் கட்சிக்குள் நடக்கும் போராட்டமாகவும் மாறி விடுகிறது.
தேர்தலைத் தனித்துக் கேட்டு விட்டு ஆட்சியை அரசாங்கத்துடன் சேர்ந்து அமைக்கலாம் என்றால் அதற்கான பேரம் பேசும் பலம் ஒரு முதலமைச்சரைத்தானே பெற வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாகத்தானே முதலமைச்சரைத் தருகிறோம் என்று சொன்னது. அப்படியானால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அல்லது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் முடிவு தொடர்பாக பஷீர் கூறிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது?
தனித்துவம் என்பது தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று ஹக்கீம் கருதுவது அர்த்தமற்ற கருத்தாகும். அப்படியான தனித்துவம் எல்லாத் தேர்தல்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தாது.
அரசாங்கத்தின் நெருங்கிய நண்பனாகவும் இல்லாமல் நேரடி எதிரியாகவும் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவதே தற்போதுள்ள அரசாங்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நிலை.
மாறாக நேரடி எதிரியாகிப் பிரச்சாரங்களைச் செய்து மக்களையும் அரசாங்கத்தின் எதிரிகளாகக் காட்டிக்கொடுத்து தேர்தலின் பின்னர் தனக்கு மட்டும் ஒரு அமைச்சுப் பதவி என்று அரசாங்கத்துடன் இணைந்து அந்த அமைச்சின் வாகனங்களில் ஊர் சுற்றித் திரிவதுதான் தனித்துவமான அரசியலா?
பேச்சு :
மூன்று வருடங்களாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் உங்களது தம்பி பசில் ஒரு செம்பு சல்லியைக் கூட அபிவிருத்திக்காகத் தருகிறார் இல்லை. இவ்வாறிருக்க இணைந்து கேட்குமாறு ஏன் நீங்கள் என்னிடம் சொல்கிறீர்கள், எனக்கு சூடு சொரணையில்லையா?
மறுபேச்சு:
மூன்று வருடங்களாக இருப்பதல்ல முக்கியம் மூன்று நாள் இருந்தாலும் முழு நம்பிக்கையோடு இருக்க வேண்டுமே. அரசாங்கம் என்னை எதிரியாக நினைக்கின்றது என்று சொல்லும் அளவுக்கு வெளிப்படையான அவநம்பிக்கைகளுடன் தானே ஹக்கீம் அரசாங்கத்துடன இணைகின்ற வரலாறு தொடர்கிறது.
தேர்தல் வரும்வரைக்கும் அரசாங்கத்துடன் இருப்பது, தேர்தல் வந்தால் தனித்துவக் காவலனாக பிரச்சாரம் செய்ய வருவது. இப்படியான ஒரு இணைவு மக்களுக்கு எதையும் செய்யாது என்பதை இனியும் ஹக்கீம் உணர்வதில்லையா?
உரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. கட்சி, கட்சி என்று மக்கள் அழிந்ததுதான் மிச்சம், ஒரு செம்பு சல்லியைக் கூட பெற்று மக்களுக்கு சேவை செய்ய முடியாத அளவுக்கு தங்களுடைய அரசியல் இருப்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். இதில் நாம் இனி எதைச் சொல்லி மக்களுக்குப் புரிய வைப்பது.
மஹிந்தவின் அரசாங்கத்திலும் தேர்தலிலும் இணைவதற்குத்தான் சூடு சொரணை வருகிறதா?
2002 இல் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலங்களில் முஸ்லிம்கள் மூதூர், தோப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட போது கிண்ணியாவிலிருந்து கொண்டு ரனிலுக்கு வேண்டுகோள் விடுத்ததெல்லாம் நிறைவேறியதா?
அப்போது காசிகளைக் கொட்டி அபிவிருத்திகள்தான் நடந்ததா? அப்படியிருந்தும் பின் வந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேரவில்லையா? அதற்கு இந்தச் சூடு சொரணையைப் பார்க்கவில்லையா?
ஜனாதிபதியின் இன்றைய ஆட்சி நிலைக்கு முழுக் காரணமும் ஹக்கீம்தான்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சரத் பொன்சேகாவுக்கு சிறுபான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை அளிக்க வைத்தனர். இதனால் சிங்கள மக்கள் ஒன்றுபட்டு மஹிந்த வெற்றி பெறுவதற்கு ஒட்டுமொத்த வாக்குகளையும் அளித்தார்கள்.
இதனூடாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியும் என்ற ஒரு சூத்திரத்தை மஹிந்த தெளிவாக விளங்கிக் கொண்டார். இதனால் இன்று சிங்கள மக்களை தம்மோடு வைத்திருக்கும் பௌத்தவாத அரசியலை அந்தக் கட்சியினர் செய்கின்றனர்.
எனவே இதற்கு முழு உடைந்தையாக இருந்தவராக ஹக்கீமைக் கூறுலாம். தொடர்ந்தும் அவர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
இவை இவ்வாறு இருக்க அழையா வீட்டு விருந்தாளியாக மஹிந்தவுடன் செல்வதற்கு மன்றாடும் நிலையும் ஹக்கீமுக்கு அண்மைக்காலங்களில் ஏற்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழம் ஒன்றின் பட்டமளிப்பு, துறைமுகத் திறப்பு விழா என்று இவற்றில் ஹக்கீம் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் அவர் அங்கு சென்று மஹிந்தவுடன் இருந்திருக்கிறார். இதற்கு மட்டும் அந்த சூடு சொரணை எப்படி இடம் கொடுத்தது.
பேச்சு :
அந்த அமைச்சருக்கு முதுகெலும்பு இருந்திருந்தால் தனித்து வடக்கில் போட்டியிட்டிருக்கலாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தான் இந்த அரசுடன் முரண்பட முடியும்.
மறுபேச்சு :
பொதுவாக இலங்கையில் உள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் முதுகெலும்பு இல்லை என்பதுதான் மக்கள் அபிப்பிராயம். அது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரையும் சேர்த்துத்தான்.
குறிப்பாக முஸ்லிம்களுக்கு தனியான ஒரு அரசியல் கட்சி வேண்டும் என்ற மக்களின் ஒரேஒரு எண்ணம்தான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
மக்களின் இந்த எண்ணத்தினால் தான் அதில் இருக்கும் அரசியல்வாதிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் இந்த எண்ணத்தை எப்பொழுது கைவிட்டு விடுகிறார்களோ அப்போது மரத்திலிருந்து தலைவர் உட்பட எல்லோரும் தொப்பென்று கீழே விழுந்து விடுவார்கள். இதுதான் முஸ்லிம் அரசியலின் சூத்திரமும் முடிச்சும்.
தலைவரின் முதுகொலும்புக்கும் சாணக்கியத்திற்கும் மக்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்கவில்லை என்பதை அதன் தீவிரப் போராளிகளும் உணர்ந்துள்ளார்கள்.
நமக்கு ஒரு கட்சி வேண்டும் அதற்காகவேனும் வாக்களிப்போம் என்ற விரக்தி நிலையில்தான் இன்று மக்கள் இருக்கிறார்கள். இதுவும் நீடிக்காது இந்த முதலீட்டை வைத்துக் கொண்டு தலைவர் உட்பட முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்தும் அரசியல் வியாபாரம் செய்ய முடியாது.
மக்கள் இந்த எண்ணத்திலிருந்து விடுபட்டுக்கொண்டு வருகிறார்கள் அடுத்த தலைமுறையில் இந்த எண்ணம் முற்றாகத் தோற்றுப் போய்விடும். முஸ்லிம் சமூகமும் அரசியல்வாதிகளும் மாற்று அரசியல் மூலங்களை உருவாக்க வேண்டிய காலகட்டத்திலிருக்கிறோம்.
இக்காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருப்பவர்கள் அனைவரும் ஹக்கீமை மட்டும் விட்டு விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் அல்லது மக்கள் நமக்கென்று தனியான ஒருகட்சி தேவை என்ற பிடிவாத சிந்தனையைத் தூக்கிப் போட்டு விட்டு சந்தர்ப்பவாத அரசியலை நோக்கி ஒன்றுபட வேண்டும்
இது இரண்டும் இல்லாதவரை பழைய குருடி கதவத்திரடி என்ற கதைதான் தொடரும்.
No comments:
Post a Comment