வடக்கில்
முஸ்லிம்கள் மீள்குடியமர்வதை அடிப்படை வாத குழுக்களை மீள்குடியேற்றம் செய்வது என பொதுபலசேனா
முன்னொடுக்கும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்று வவுனியா மாவட்ட இன நல்லுறவு
ஒன்றியத்தின் தலைவரும்,வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
நேற்று
பொதுபலசேனா என்னும் இனவாத அமைப்பினரால் நடத்தப்பட்ட ஊடக மாநாடு ஒன்றில் வடக்கில் முஸ்லிம்களின்
மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து குறித்து தமது தரப்பு நியாயாங்களை
அவர் விளக்கி இவ்வறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
வடக்கில்
1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் பயங்கரவாத அமைப்பினரால் வெளியேற்றப்பட்டனர்.கடந்த 20 வருடங்களாக
அம்முஸ்லிம்கள் தமது தயாகத்தில் வாழ முடியாத நிலையேற்பட்டிருந்தது.அக்காலப்பகுதியில்
முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகள் என்பன விடுதலைப் புலிகளினால் பெறப்பட்டு
அதில் தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு
வன்னி மாவட்டத்தில் பெரியமடு,முசலி,விடத்தில் தீவு உள்ளிட்ட பல கிராமங்களில் வன்னி
மாவட்டத்தை சாராத வெளி மாவட்ட தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்..இவ்வாறான சூழலில்
மீண்டும் முஸ்லிம்கள் தமது மண்ணுக்கு செல்கின்ற போது,அந்த காணிகளை மீளப் பெற முயற்சிகளை
செய்கின்ற போது அதற்கு இனவாத முகம் பொருத்தப்பட்டு முஸ்லிம்களையும்,முஸ்லிம்களின் தலைமைகளையும் விமர்சிக்கும் வேலைத்திட்டம் பல்வேறு பெயர்களில்
உதயமாகியிருக்கின்ற இனவாத அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இலங்கையில்
உள்ள புள்ளிவிபர திணைக்களம் மற்றும் தேர்தல் ஆணையகம்,மாவட்ட செயலக புள்ளிவிபர தரவுகள்
இப்பிரதேசத்தில் முஸ்லிம்களின் பரம்பல்,அவர்களது எண்ணிக்கை என்பனவற்றை தெளிவாக வெளியிட்டுள்ள
நிலையில் தற்போது நேற்று முளைத்த காளான் போன்ற இனவாத பொதுபலசேனா கூறிவருகின்றது.
இவ்வாறு
முஸ்லிம்கள் வாழ்ந்த மண்ணில் மீளக்குடியமர தேவையான வசதிகளை அரசாங்கம்,மற்றும் அமைச்சர்கள்
முன்னெடுக்கின்ற போது,இதற்கு எதிராக முஸ்லிம் அடிப்படைவாதிகளை குடியமர்த்தப்படுவதாக
புரளிகளை கிளப்பி அதன் மூலம்,பொது பலசேனா வடமாகாண தமிழர்களுக்கிடையில் ஊடுறவி மீண்டும் இனக்கலவரத்தை தோற்றுவிக்கவே முற்படுகின்றது
என்பதுதெளிவான உண்மையாகும்.ஆடு நனைகின்றது என ஓநாய் அழுத கதையினைப் போன்றது தான் பொதுபலசேனாவின்
நகர்வாகும்.
வடக்கில்
தமிழ்-முஸ்லிம் உறவு என்பது எவராலும் பிரித்து பார்க்க முடியாதொன்று என்பதை பொதுபலசேனாவுக்கு
பகிரங்கமாக சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மற்றொரு
சிறுபான்மை சமூகத்தை ஏவி துர்செயலில் ஈடுபடும் இனவாதிகள் கடந்த காலங்களில் படுதோல்வி
அடைந்த வரலாற்றை அவர்களுக்கு நினைவுபடுத்தவிரும்புகின்றேன்.
வடக்கில்
எந்தவொரு தமிழ் சகோதரினனது ஒரு அங்குல காணியினை கூட முஸ்லிம்கள் அபகரித்ததில்லை.இதற்கு
அம்மக்கள் சாட்சியாக இருக்கின்றனர்.மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் சிலர் இவ்வாறான
புழுகு மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு தொடர்ந்து அதற்கு உயிரூட்டலாம் என பகற்கனவு காண்கின்றனர்.
பொதுபலசேனா
தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறை செலுத்துகின்றது என்றால்,அது தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை
என்பதை தமது சுயநல அரசியலுக்காக வக்காலத்து வாங்கும் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.அதனை
புரிய தவறுமெனில் இறைவனை தவிர வேறு எவராலும் எமது வன்னி மக்களை பாதுக்காக்க முடியாது
என்ற உண்மையினை சொல்லி வைக்கவிரும்புகின்றேன். என்றும் அப்துல் பாரி அவ்வறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment